சமையல் கியாஸ் மானியம் ரத்து ஆகிறது பாராளுமன்றத்தில் மந்திரி அறிவிப்பு

இந்தியா முழுவதும் 18 கோடியே 11 லட்சம் சமையல் கியாஸ் இணைப்புகள் உள்ளன.

இதில் 2½ கோடி இணைப்புகள் கடந்த ஓராண்டில் ஏழைப்பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட இணைப்புகள் ஆகும். 2 கோடியே 66 லட்சம் பேர் மானியம் இல்லாமல் சந்தை விலையில் சிலிண்டர்களை வாங்குகிறார்கள்.

வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. (டெல்லியில் தற்போது மானியம் நீங்கலாக ஒரு சிலிண்டரின் விலை 477 ரூபாய் 46 காசுகள் ஆகும்).

ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்களை சந்தை விலை கொடுத்து தான் வாங்க வேண்டும். அதாவது கூடுதலாக வாங்கும் சிலிண்டர்களுக்கு மானியம் கிடையாது.

ஒரு சிலிண்டருக்கு தற்போது 84 ரூபாய் 54 காசு மானியமாக வழங்கப்படுகிறது. மானியம் போக சென்னையில் தற்போது ஒரு சிலிண்டரின் விலை 574 ரூபாய் 70 காசு ஆகும்.

சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தும் அதிகாரத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு வழங்கி இருக்கிறது. அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை வாட் வரி நீங்கலாக மாதம் தோறும் ரூ.2 உயர்த்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சரக்கு சேவை வரி அமலுக்கு வந்ததை தொடர்ந்து கடந்த ஜூலை 1-ந் தேதி சிலிண்டரின் விலை 32 ரூபாய் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், வாட் வரி நீங்கலாக இனி மாதம்தோறும் 4 ரூபாய் உயர்த்துமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

மேலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சமையல் கியாஸ் மானியம் ரத்து ஆகிறது.

இதுபற்றி பெட்ரோலிய துறை ராஜாங்க மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த போது கூறியதாவது:-

கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப் படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை மாதம்தோறும் 2 ரூபாய் உயர்த்துமாறு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி இதுவரை 10 முறை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் வாட் வரி நீங்கலாக மாதம்தோறும் 4 ரூபாய் உயர்த்துமாறு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

சமையல் கியாசுக்காக அரசு வழங்கும் மானியம் முழுமையாக ரத்து ஆகும் வரையிலோ அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலோ அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையிலோ இது நீடிக்கும். மேற்கண்ட இந்த மூன்றில் எது முதலில் வருகிறதோ அதற்கு இந்த உத்தரவு பொருந்தும்.

இவ்வாறு மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.
Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :