ரஜினிகாந்தின் அடுத்த நடவடிக்கை என்ன? போருக்கான ஆயுதங்கள் குறித்த அறிவிப்பாக இருக்குமா?

நடிகர் ரஜினிகாந்த் இன்னும் 2 மாதங்கள் கழித்து ரசிகர்களுடன் சந்திக்க போவதாக அறிவித்துள்ள நிலையில் அப்போது தலைவர் என்ன பேசுவார் என்ற ஆவல் அவரது ரசிகர்களுக்கு இப்போதே தொற்றிக் கொண்டது. கடந்த 21 ஆண்டுகளாக ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அவரது படையப்பா பட டைலாக் மாதிரி எப்ப வருவார், எப்படி வருவார்னு யாருக்கும் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்திடுவார் என்று சொல்லாமல் சொல்லுவதாக மௌனம் காத்து வந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னரும் , கருணாநிதிக்கு உடல்நலமின்மையாலும் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சசிகலாவின் முதல்வர் கனவு, கூவத்தூர் கூத்துகள், அதிமுக பிளவு, மக்கள் நலனில் அக்கறையின்மை உள்ளிட்டவற்றை ரஜினிகாந்த் கூர்ந்து கவனித்து வந்தார்



ரசிகர்களுடன் சந்திப்பு 

கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மொத்தம் 15 மாவட்ட நிர்வாகிகளுடன் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அரசியலில் முதலை 

முதல் நாள் சந்திப்பு நிகழ்ச்சியில் ரஜினி பேசுகையில் ரஜினிகாந்த் முடிவு எடுக்க பயப்படுகிறார் என்றும், முடிவுகளை எடுக்க தயங்குகிறார் என்றும் சில கூறுகிறார்கள், சிலர் எழுதுகிறார்கள். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் நான் நன்கு சிந்தித்து எடுப்பேன். அதில் ஏதேனும் பிரச்சினை வரும் என்றால் அந்த முடிவை கைவிட்டுவிடுவேன். ஆற்றுக்குள் ஒரு காலை வைக்கிறோம்.. அதில் நிறைய முதலைகள் உள்ளன. உடனே காலை எடுக்காமல், முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று மற்றொரு காலையும் வைக்க முடியுமா?

என் பெயரை தவறாக.... 

என் பெயரை சில அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இன்று நடிகனாக உள்ள நான் கடவுளின் கருவி. நாளை நான் என்னவாக வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதை அவர் செய்வார். அதன்படி இன்று நடிகன், நாளை என்னவாவேன் என்று கடவுள்தான் தீர்மானிப்பார் என்றார்.

சிஸ்டம் கெட்டுவிட்டது 

ரஜினியின் இந்த பேச்சு அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இறுதி நாளில் நாட்டில் சிஸ்டம் கெட்டு விட்டது. ஸ்டாலின் மிகச் சிறந்த நிர்வாகி, அன்புமணி, திருமாவளவன் ஆகியோரும் திறமைசாலிகள். இருந்தாலும் என்ன பயன். போர் வரும் போது பார்த்துக் கொள்வோம், கடவுள் இருக்கிறார். என்னை வாழ வைத்த தெய்வங்களாகிய தமிழக மக்களும் நான் நன்றாக இருப்பதை போல் இருக்க வேண்டும் என்றார்.

பெரும் தாக்கம் 

இந்த பேச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் பிற மாநிலத்தவர் அரசியலுக்கு வரலாம். ஆனால் தங்களை ஆளக் கூடாது என்று வெளிப்படையாகவே பேசினார். இந்த நிலையில் காலா திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிந்து இன்று மும்பையிலிருந்து சென்னை திரும்பினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் 2 மாதங்கள் கழித்து ரசிகர்களை சந்திப்பேன் என்றார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி 

தற்போது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் போன சந்திப்பின் போது ரஜினியின் பேச்சு அதிர வைத்தது. அடுத்த கட்ட சந்திப்பின் போது என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ஜூலை மாதம் தெரிவிப்பார் என்றிருந்தார். இந்நிலையில் இரண்டு மாதங்கள் கழித்து அதாவது ஆகஸ்ட் மாதம் கட்சியின் பெயர், கொடி, நிர்வாகிகள் உள்ளிட்டோரின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Source: Oneindia Tamil

Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :